சுந்தரமான மனிதராவதற்கு
உலகில் வாழும் எல்லா உயிர்களும் சுகமாக வாழ்வதற்கே விரும்புகின்றனர். அழுது புலம்பி கவலையுடனும் வேதனையுடனும் வாழ்வதற்கு யாருமே விரும்பமாட்டார்கள். ஒரு சொல்லால் கூட துன்புறுவதற்கு யாரும் விரும்பமாட்டார்கள்.
இயற்கையின் எழுதப்படாத விதி
நாம் எதை கொடுக்கின்றோமோ, எந்த வார்த்தைகளை பிரயோகிக்கின்றோமோ, எத்தகைய எண்ணங்களை நினைக்கின்றோமோ அதுவே எமக்கு பன்மடங்காக திரும்பக்கிடைக்கும் என்பது இயற்கையின் எழுதப்படாத விதியாகும். கர்மம், வினை, ஊழ் என்றெல்லாம் இயற்கையின் இவ் விதியே அழைக்கப்படுகின்றது. இந்த விடயத்தை அல்லது இந்த இயற்கையின் நீதியை ஏற்று அதன்படி நடந்துகொள்பரது அகவாழ்வில் பென்னம் பெரிய புரட்சியே நிகழும். நீங்கள் எதை பெற விரும்புகின்றீர்களோ அதனை ஏனையோருக்கு கொடுப்பதற்கு முற்படுவீர்கள். நம்ப முடியுமா?
தன்னை உவமையாகக் கொண்டு.
எம்மை யாராவது ஏளனம் செய்தால், அவமானப்படுத்தினால், ஏசினால், திட்டினால், அடித்தால், துன்புறுத்தினால் நாம் சந்தோஷப்படுவோமா? இல்லை. யாரேனும் எம்முடன் சிரித்து பேசுவதாக இருந்தால், எம்மை புகழ்ந்து பேசினால், எம்மை பாராட்டினால், எமக்கு பரிசுகள் அளித்தால் நாம் மிகவும் சந்தோஷமடைவோம் அல்லவா? இந்த விடயத்தை நன்கு மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். இப்போது நீங்கள் உங்களுடன் வாழும் நபர்களை நீங்களாக உருவகப்படுத்திக்கொள்ளுங்கள். இப்போது உங்களால் ஏதேனும் விடயத்தை முன்னிட்டு அவரைஃஅவர்களை முறைத்து பார்க்க முடியுமா? ஏச முடியுமா? துன்புறுத்த முடியுமா? முடியாது. காரணம் என்ன? 'என்னை யாராவது இவ்வாறு ஏசினால் துன்புறுத்தினால் எனக்கு எவ்வளவு கவலையாக இருக்கும்? அதேபோன்ற கவலையை இவரும் அனுபவிப்பாரே.. பாவம்.. நான் அத்தகைய வேதனையை அவருக்கு கொடுக்க மாட்டேன். இன்னுமொருவரை கஷ்டத்திற்குள்ளாக்க மாட்டேன்' என்று உங்கள் மனதில் எண்ணங்கள் தோன்றுவதாகும். இவ்வாறாக உங்களால் நினைக்க முடியுமானால் உங்களுள் மாணிக்கம் போன்ற பெறுமதி மிக்க கருணை எனும் அதியுத்தம குணம் குடிகொண்டுள்ளது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
இந்த உலகில் வாழும் எல்லோரும்; ஏதேனும் மனக்கஷ்டத்துடனேயே வாழ்கின்றனர். உலகில் எந்த மூலையில் வாழும் ஒருவரை எடுத்துக்கொண்டாலும் அவர் ஏதேனும் ஒரு விடயத்திற்காக ஏங்குபவராகவோ, கவலையடைபவராகவோ இருப்பார் என்றால் அது மிகையல்ல. இங்கு யாருமே முழுமையானவர்களல்ல. மனிதர்களாகட்டும் அல்லது ஐந்தறிவு கொண்ட மிருகங்களாகட்டும் அவ் அனைவரும் அன்பு, கருணை, பாசம், அன்பான சொற்கள், ஆறுதலான வார்த்தைகள் என்பவற்றிற்கு ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவை கிடைக்காத காரணத்தினால் பல மனிதர்கள் மானசீக ரீதியாக பெரும் பின்னடைவு அடைந்திருக்கிறார்கள். பலர் தம் பெறுமதியான உயிரைக்கூட இழந்திருக்கிறார்கள். அனைவரும் இந்த வாழ்க்கை போராட்டத்தில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். எம்முடன் பழகும் பலரது வாழ்க்கை சரிதைகளை நாம் அறிந்திருப்பதில்லை. எனவே எம்முடன் பழகுபவர்கள், அறிந்தவர்கள் அறியாதவர்கள் என எத்தகையவர்களுக்கும் கருணையுடன் இருங்கள். அன்பாக பேசுங்கள்.
மனதார புன்னகையுங்கள்.
கோடிக்கணக்கான உயிரினங்களிடையே மனிதனுக்கே உரித்தான பெறுமதிமிக்க ஒரு திறன் இருக்கிறது. அதுவே புன்னகைக்கும் திறனாகும். உங்கள் முன்னே வருபவர் அறிந்தவராயினும் அறியாதவராயினும் ஒரு புன்னகை மூலம் அவர்களது மனதை மகிழ்விக்க உங்களால் முடியும். அதற்காக உங்களுக்கு ஒரு சதம் கூட விரயமாகுவதில்லை. அவர் அந்த சமயத்தில் ஏதேனும் மனக்கவலையில் இருந்தாலும் அதனை ஒரு நொடியேனும் இல்லாமல் செய்வதற்கு உங்கள் அழகிய புன்னகையால் முடியும். படித்தவர், படிக்காதவர், ஏழை, செல்வந்தர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் எனும் வேறுபாடுகளுக்கு உங்கள் புன்னகையை பலியிட வேண்டாம். உங்கள் முன்னிலையில் வருபவருக்கு, அலுவலகத்தில் உள்ளோர்களுக்கு, பாடசாலை ஆசிரியர் மற்றும் சக மாணவர்களுக்கு மனமார காலை வணக்கத்தை தெரிவியுங்கள். வெறும் 'பேச்சுவாக்கில் சொல்வதற்கும' ஒருவரை பார்த்து உளமார வணக்கத்தை தெரிவிப்பதக்குமான மாற்றத்தை உங்களாலும் உணர முடியும். இப்படி நினைத்து பாருங்கள். உங்களை கண்டவுடன் ஒருவர் அழகாக புன்னகைத்து மனமார புழழன அழசniபெ என்று கூறினால் உங்கள் மனம் எவ்வளவு புத்துணர்ச்சியடையும் என்று. அதே புத்துணர்வை உங்களால் இன்னுமொருவருக்கு கொடுக்க முடியுமானால் அது உங்கள் மனதிற்கு பெருந்திருப்தி அளிக்கும் விடயமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை.
உங்கள் முன்னிலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமமான மனதுடன் இருங்கள்.
மனிதன் ஒரு சமூக பிராணி என கிரேக்க அறிஞரான அரிஸ்டோட்டில் கூறியுள்ளார். தனிமனித கூட்டமான சமூகத்தில் வாழும் நாம் அனைவரும் சமூகத்தை சார்ந்து வாழும் நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம். எனவே பல்வேறு கருத்துக்கள், எண்ணங்கள், நம்பிக்கைகள் கொண்ட மனிதர்களிடையே வாழ்வதற்கு நாம் கட்டுப்பட்டிருகிறோம். சமூகத்தின் மிகச்சிறியதும் ஆனால் பலம் பொருந்தியதுமான குடும்பமும் இவ்விடயத்தில் உள்ளடங்கும். ஈன்றெடுத்த பெற்றோர்களிடமும், ஒரே தாய் வயிற்றிலிருந்து பிறந்த சகோதரர்களிடமும் வௌ;வேறு கருத்துகள், எண்ணங்கள், விருப்பு வெறுப்புகள், இலக்குகள் என்பன இருக்கக்கூடும். கூட்டாக வாழும் நாம் எம்முடன் வாழ்பவர்கள் தொடர்பாக ஓரளவேனும் புரிந்துணர்வுடன் இருத்தல் மிக அவசியமான காரணியாகும். அந்த புரிந்துணர்வே நாம் ஒற்றுமையுடன் வாழ்வதற்கும் ஆதாரமாக விளங்குகின்றது.
ஒருசிலர் உங்கள் அருகே இருக்கும் போது மட்டும் அவரை அன்புடன் உபசரித்து, பேசுவதும,; அவர் அருகில் இல்லாதபோது அவர் மீது வெறுப்புடன் நடந்து கொள்வதும், அவர் தொடர்பாக அன்பற்ற அவதூறு சொற்களை பிரயோகிப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். இது ஒற்றுமையுடன் வாழ்வதற்கு ஒருபோதும் காரணமாகாது. உங்கள் நண்பர், உறவினர், அறிந்தவர், அறியாதவர் எனும் யாராக இருந்தாலும் அந்த நபர் அருகே இருக்கும் போது நீங்கள் எவ்வாறு அன்புடன் நடந்து கொள்கின்றீர்களோ, அன்புடன் பேசுகின்றீர்களோ, எவ்வாறு அன்பு கலந்த எண்ணங்களை நினைக்கின்றீர்களோ அவ்வாறே அவர் அருகே இல்லாதபோதும் நடந்து கொள்ள வேண்டும். பாசாங்கு, வஞ்சனை என்பன நிறைந்த மனதுடன் இதனை செய்ய முடியாது. முதலில் மனதை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு நடந்து கொள்ளும் போது நீங்கள் ஏனையோர் மத்தியில் நம்பிக்கைக்குரிய ஒருவராவீர்கள். அதுவே ஒற்றுமைக்கும் உறுதுணையாக விளங்கும்.
பகிர்ந்து சாப்பிடுங்கள்.
இந்த விடயம் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் இன்னுமொரு முக்கிய விடயமாகும். தனக்கு கிடைப்பது சிறிதளவேயானாலும் அதனை தன்னுடன் இருப்பவர்களுடன் பகிர்ந்து சாப்பிட வேண்டும். இது என்ன? சிறுபிள்ளைத்தனமான விடயம் என்று நினைக்க வேண்டாம். இந்த சிறு விடயமானது ஒரு குழுவிற்கிடையே அல்லது குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையை தோற்றுவிப்பதற்கும் தோன்றியிருக்கும் ஒற்றுமை மென்மேலும் விருத்தியடைவதற்கும் பெருங்காரணியாக விளங்குவதாகும்.
ஒரே இலக்கு, ஒரே மனப்பான்மை
ஒரு மனித கூட்டம் ஒற்றுமையாக வாழ்வதற்கு அடிப்படையாக விளங்கும் காரணி இதுவேயாகும். தார்மீகமாக வாழ வேண்டும் எனும் மனப்பாங்குடன் வாழும் ஒரு கூட்டத்துடன் பாவ வாழ்க்கை வாழ்பவர்கள் சேர்ந்து வாழ முடியாது. 'எப்படியாவது பரீட்சையில் உயர் சித்தியடைய வேண்டும்' என நினைத்து அதற்காக பாடுபடும் ஒரு மாணவர் கூட்டத்துடன் ஏனோ தானோ என பாடசாலைக்கு வரும் மாணவர்கள் சேர்ந்திருக்க மாட்டார்கள். காரணம் என்ன? மனப்பான்மையும் இலக்குகளும் வௌ;வேறானவையே இதற்கு காரணமாகும். ஆனால் 'நாம் அனைவரும் இந்த பரீட்சையில் உயர்சித்தியடைய வேண்டும' என நினைத்து அதற்காக அனைவரும் ஒருவரைப் போன்று முயற்சிக்கும் போது அங்கு ஒற்றுமை எனும் விடயத்திற்கு குறைவுகள் இருக்காது. அனைவரும் பொதுவான ஒரு மனப்பான்மையுடன் பொது இலட்சியத்துடன் சமமாகும் பட்சத்தில் அங்கு வினைத்திறனும் ஒற்றுமையும் மேலோங்கும் என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை.
நாம் அனைவரும் மனதால் உயர்ந்தவர்கள் எனவே நாம் 'மனிதர்கள்' என அழைக்கப்படுகின்றோம். சக மனிதனின் உயர்வு தாழ்வுகளை பொருட்படுத்தாமல் அவர் மீது கருணையுடன் நடந்து கொள்வதானது மனிதனாக பிறந்த எம் அனைவரினதும் கடமையாகும்.
இன்னுமொருவரது கண்ணீருக்கு காரணமாகாமல் இருக்க முடியமானால், இன்னுமொருவரது கண்ணீரை துடைக்க முடியுமானால், இன்னுமொருவரது முகத்திற்கு புன்னகையை அளிக்க முடியுமானால் இன்னுமொருவரது பசியை உங்கள் உணவினால் தணிக்க முடியுமானால் பிரிந்திருப்போர்களை ஒற்றுமையுடன் சேர்க்க முடியுமானால், நீங்கள் மனிதர்கள் மத்தியில் வாழும் மாணிக்கமாவீர்கள். உங்களை போன்ற மாமனிதர்களை இயற்கையும் பாதுகாக்கும்.
உங்களுடைய இந்த இரு கரங்களும் தானமே அளிக்கட்டும்.
உங்களது இதயம் கருணையை பிறப்பிக்கும் ஊற்றாகட்டும.
தங்கள் அறிவு பூத்துக்குழுங்கும் விருட்சத்தினை போன்று சுந்தரமானதாகட்டும்.!
தங்கள் பெறுமதியான வாழ்வு குணநலன்கள் பெருக்கெடுத்து ஓடும் அழகிய நீரோடையாகட்டும்.
- மணிமேகலை

Comments
Post a Comment