இறைவன் குடிகொள்ளும்

கோயில்.


இந்துக்களின் பிரதான வழிபாட்டிடம் கோயில் என அழைக்கப்படுகிறது. இறைவனின் தங்குமிடமாக கோயில் கருதப்படுகிறது. இறைவனுக்காக பூஜைகள் செய்து யாக ஹோமங்களை நடாத்தும் புனித தளமாக கோயில்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன.

  இறைவன் தடத்தலக்கண வடிவில் அருள்பாளிக்கும் இடத்தை திருக்கோயில் என்றும் விசேடித்து அழைப்பது வழக்கமாகும். இந்து கோயில்களின் மதிற்சுவர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் அலங்கரிக்கப்பட்டிருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். இதற்கான பொருளை நீங்கள் அறிவீர்களா? இங்கு பயன்படுத்தப்படுகின்ற வெண்ணிறத்தின் மூலம் உடலின் நோயெதிர்ப்பிற்கு பெரும் பங்களிக்கும் வெண்குருதியும் சிவப்பு நிறத்தின் மூலம்  உடலெங்கும் ஒட்சிசனை கொண்டு செல்லும் செங்குருதியும் அடையாளப்படுத்தப்படுகின்றன. மேலும் வெண்ணிறத்தின் மூலம் ஆணின் விந்தணுக்களும் சிவப்பு நிறத்தின் மூலம் பெண்ணின் கருப்பையும் அடையாளப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. புதிய உயிரின் உருவாக்கம் தொடர்பில் விஞ்ஞானரீதியான விளக்கத்தை பண்டைய இந்துக்கள் அறிந்திருந்தமையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் இந்து கோயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளமையை இந்த விடயத்தின் மூலம் எம்மால் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். கோயிலை சுட்டுவதற்காக பல பெயர்கள் உண்டு. அவற்றில் ஆலயம், தேவகிருஹம், தேவாலயம், தேவஸ்தானம், தேவமாளிகை போன்றன அவற்றில் சிலவாகும். 


மனிதனின் உடலமைப்பின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டே கோயில்களின் கட்டமைவு திட்டமிடப்படுகின்றன. 

கோயிலில் வீற்றிருக்கும் தெய்வங்களின் எண்ணிக்கைபடி கோயில்கள் பிரதானமாக மூன்று வகைப்படும். 

தனிக்கோயில் - தனி ஒரு இறைவன் அல்லது இறைவி மாத்திரம் வீற்றிருக்கும் கோயில் - நல்லூர் கந்தசுவாமி கோயில்.

இரு தெய்வ கோயில் - இறைவன் மற்றும் இறைவி ஆகியோர் வீற்றிருக்கும் கோயில். திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம்.

கூட்டுக்கோயில் - இறைன் இறைவி மற்றும் ஏனைய பரிவார தெய்வங்கள் வீற்றிருக்கும் கோயில்கள். 


கோவிலின் அங்கங்கள் :


 கருவரை       

    கோயிலின் பிரதான இறைவனின் சிலை ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் இடம். இது கருவரை மற்றும் கர்ப்பகிருஹம் எனவும் அழைக்கப்படும். மனித உடலோடு இந்துக் கோயிலை உருவகிக்கும் ஆகமங்கள் இதனை மனிதனின் சிரசிற்கு உவமிக்கின்றன. கர்ப்பக்கிருகம் இந்துக் கோவில்களின் பிரதான பகுதியாக விளங்குகின்றது. மூலவராகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடமே கர்ப்பக்கிருகம்.


அர்த்தமண்டபம் 

கருவறையின் முன் பகுதி. கருவறைக்குரியப்பொருட்கள் வைத்திருக்கும் இடமாகும். 


மகா மண்டபம்.

அர்த்த மண்டபத்திற்கு பின் அமைக்கப்பட்டிருக்கும் இம்மகா மண்டபத்திலேயே கருவறையில் வீற்றிருக்கும் இறைவனை வணங்குவதற்காக பக்தர்கள் கூடியிருப்பர். 

நிருத்ய மண்டபம். 

ஆரம்ப காலங்களில் இறைவனை சந்தோஷப்படுத்துவதற்காக இறைவனுக்கான ஆடல் பாடல்கள் என்பன நிகழ்த்தப்பட்ட மண்டபமாகும். எனினும் இம் மண்டபம் தற்காலத்தில் திருமண நிகழ்வுகளை நடாத்துவதற்காக பயயன்படுத்தப்படுகிறது. 

அபிசேக மண்டபம். 

கோயிலின் பூஜைகள் ஆரம்பிப்பதற்கு முன் விக்கிரகங்கள் இம்மண்டபத்தில் வைத்தே நீராட்டப்படுகின்றன. 

கல்யாணமண்டபம்

அலங்கார வேலைப்பாடுகள் மிகுந்த இம் மண்டபத்திலேயே இறைவனுக்கு திருக்கல்யாணம் நடாத்தப்படும்.

வசந்தமண்டபம்  

கோடைகால வசந்தவிழா நடைபெறும் இடம் மற்றும் கோயிலின் விசேட நிகழ்வுகள் இம்மண்டபத்திலேயே இடம்பெறும். 

பள்ளியறை  - கடவுள் சயனிக்கும் இடம் 

மடப்பள்ளி - அன்னதான உணவு சமைக்கும் இடம் 

கோபுரம் 

வெளியே இருந்து பார்க்கும் போது கோயிலின் கோபுரமே அனைவருக்கும் தென்படும். இந்த கோபுரத்தை கண்டவுடன் கைகளை உயர்த்தி வணங்குவது இந்துக்களின் மரபாகும். இது கோடி புண்ணித்தை தரும் செயலாக இந்துக்கள் நம்பகின்றனர். பௌத்தர்கள் தம் விகாரை தூபியின் சூடாமாணிக்கதை காணும் போது கைகூப்பி வணங்குவதைப்போன்று இந்துக்கள் தம் கோயில் கோபுரங்களை கண்டவுடன் இவ்வாறாக வணங்குகின்றனர். 

கொடிமரம் ( துவஜஸ்தம்பம் ) 

கோவிலுக்குள் அடுத்ததாக நம் கண்களுக்கு கொடி மரம் தென்படும். துவஜஸ்தம்பம் என்று அழைக்கப்படும் ஆலய கொடி மரமும் மிகப்பெரிய  தத்துவங்களை தன்னுள் கொண்டுள்ளது. நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கோவிலுக்கு கொடிமரம் என்று நம் ஆகமங்கள்  சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம்  அமைக்கப்படுகிறது. 

நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன. பொதுவாக இடை,பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை  எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க, மனம் ஒரு நிலைப்படும். இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது. 

கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது. அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும். அதுபோல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும்  என்பதற்கு விதிகள் உள்ளன. இது கோவிலுக்கு கோவில் மாறுபட்டாலும், கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி  அமைப்பார்கள்.

அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும் இதற்கு சமபீடத்தில், சதுர பாகம், படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப் பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும். இதன்மூலம் கொடி மரம், மும்மூர்த்திகளையும், அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது.

பலிபீடம் 

பலி பீடத்தின் உயரம், மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும்.

பலி பீடத்தில் பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதம், அசுரபத்தி, பத்மம் என்று பல வகைகள் உள்ளன.

பலி பீடத்தை பொதுவாக 'பத்ரலிங்கம்' என்று அழைப்பார்கள். பலி பீடம் அருகில் இருக்கும் நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவ மலம், பலி பீடத்தில்தான் ஒதுங்கியிருக்கும். எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். 'நான்' என்ற அகங்காரத்தை பலியிட வேண்டும்.


நந்தி

பலிபீடத்திற்கு எதிரில் அமைந்திருப்பது நந்தி விக்கிரகமாகும். கோயில்களில் வீற்றிருக்கும் இறைவனின் வாகனமாக கருதப்படுகின்றவர்களின் விக்கிரகங்களை இங்கு காண முடியும். 

உதா: சிவன் கோயில் - நந்தி

கணபதி கோயில் - எலி

உமை, துர்க்கை, காளி – சிங்கம் 

முருகன் - மயில் 

மேற்கூறப்பட்ட விடயங்களில் இருந்து இந்துக்களின் ஆலயமான கோயில் தொடர்பாக சிறிதளவேனும் உய்த்துணர்வை பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன். 


Comments

Popular posts from this blog

சுந்தரமான மனிதராவதற்கு